Friday, December 22, 2017

தலபுராணம்

அமிர்தத்திற்காக மந்தாரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிராகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து உண்டான ஆலகால விஷத்தை இறைவன் உண்டு நீலகண்டனாக மாறியதும், அமிர்தத்தை தேவர்கள், அசுரர்களை ஏமாற்றி பங்கிட்டு கொண்ட இடமே இந்த திருப்பாலைவனம் ஆகும்.


ஆலகால விஷமுண்ட இறைவனுக்கு அமிர்தத்தின் ஒரு பகுதியை சமர்ப்பிக்கின்றனர். அமிர்தத்தையே சிவலிங்கமாக அமிர்தேசுவரர் என்று பெயரிட்டு வழிபட்டு வந்தனர்.




தேவர்கள் அமிர்தத்தை பகிர்ந்து கொண்ட செய்தி அசுரர்களுக்கு தெரிந்ததும், அமிர்தம் உண்ட கையை இத்திருக்குளத்தின் நீரில் தேவர்கள் கழுவியதும் அந்நீரை உண்டால் சாகாவரம் பெறலாம் என்று நினைத்து அசுரர்கள் தவளை வடிவம் கொண்டு நீரில் இருக்க திட்டமிட்ட செய்தி தேவர்களுக்கு தெரியவர இக்குளத்தில் தவளைகளே இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றது இத்திருக்குளம்.



இலிங்கத்தினை சூழ்ந்து பாலைமரம் வளர்ந்தது, தேவர்கள் தேனீக்களாக நித்தமும் பூஜை செய்தனர். வாசுகி எனும் பாம்பரசன் மரத்திலுள்ள அமிர்தலிங்கத்தினை வழிபட்டு இறைவன் அருள் பெற்றார்.


வடபுலம் வென்ற முதலாம் இராஜேந்திர சோழனின் படைகள், கரும்பச்சை நிறத்தில் எலுமிச்சை மரத்தின் சிறு இலைகளைப்போல் வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த அடர்ந்த பாலை மரங்கள் நிறைந்த கடற்கரையை ஒட்டி இருந்த காட்டின் வழியே  சென்று கொண்டிருந்தன. படைகளை ஓய்வெடுக்க கட்டளையிட்ட அரசன் தன் பட்டத்து யானையை அருகில் இருந்த பாலை மரத்தில் கட்டச் சொல்ல அந்த மிகப் பெரிய அழகிய பட்டத்து யானை மூர்ச்சையாகி கீழே விழுந்தது.



அம்மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக மன்னனுக்கு தோன்றவே,அவன்  அவன் மரத்தை வெட்ட பணித்தான்.


மரத்தை கோடரியால் வெட்ட வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வரவே அதிர்ச்சியும் பயமும் கொண்டு அந்த இடத்தை ஆராய்ந்தபோது தலையில் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் தென்படவே மனம் நொந்த அரசன் தன்னுடைய செயலுக்கு வருந்தி இறைவர்க்கு மிகப்பெரிய அழகான கோயிலை கட்டுவித்தான்.


இத்திருத்தலத்தில்  ஆவுடையார் கல்லிலும், இலிங்கம் மரத்திலும் இருப்பது தனிச் சிறப்பு.
(குறிப்பு: இலிங்கத்தில் கோடாரிப்பட்டத் தழும்பு இன்றும் காணப்படுகிறது.)

இவ்வகை சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் இறைவர் பாலீஸ்வரநாதர் என்று அழைக்கப்பெறுகிறார். சுயம்பு மூர்த்தியான வெண்மை நிறத்தோடு காட்சி தரும் லிங்க வடிவை காணும் போது உண்மை அன்பர்களுக்கு உடல் சிலிர்க்கும் உள்ளம் உருகும். இங்கு வீற்றிருக்கும் அம்பாள், என்றும் பிரியாத நாச்சியார் லோகாம்பிகை என்ற திருப்பெயரோடு கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

~ ஓம்நமசிவாய!

No comments:

Post a Comment