ஆலக் கோயில் என்றால் ஆனைக் கோயில். ஆனைக் கோயில் கட்டடங்களைக் கஜபிருஷ்ட விமானம் என்று சிற்பசாஸ்திரங்களில் பெயர் கூறப்படுகிறது. கஜபிருஷ்ட (கஜபிரஸ்தா) விமானக் கோயில்களாகிய ஆனைக் கோயில் கட்டங்கள் தொண்டைநாட்டில் (தொண்டை மண்டலத்தில்) தான் அதிகமாக இருக்கின்றன. சோழ நாட்டில் சில யானைக் கோயில்கள் மட்டும் இருக்கின்றன. பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தென் கன்னட மாவட்டத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பாக அமைந்திருக்கின்றன.
திருப்பாலை வனத்து ஆனைக் கோயிலின் அமைப்பு தனிப்பட்ட அமைப்புடன் அழகும் உடையது. மற்ற ஆனைக் கோயில்களின் அமைப்பைப்பார்த்துவிட்டு இந்தக் கோவிலின் அமைப்பைப் பார்த்தால் தான் இதனுடைய புதுமையான சிறப்பு நன்றாகத் தெரியும். மற்ற ஆனைக்கோவில்களின் அமைப்பைப் பாராதவர்கள் இந்தக் கோவில் கட்டட அமைப்பை மட்டும் பார்ப்பார்களானால் இதனுடைய அருமையும் பெருமையும் நன்கு அறியமாட்டார்கள். இந்தத் திருப்பாலைவனத்து யானைக் கோயில்போல அமைந்திருக்கிற இன்னொரு கோயில் காஞ்சிபுரத்துக்குத் தெற்கே மாகறல் என்னும் ஊரில் இருக்கிற சிவன் கோயில் கட்டடம் ஆகும். ஆனால், மாகறல் ஆனைக் கோயிலை விட திருப்பாலை வனத்து யானைக் கோயிலில் அழகான சிறப்புகள் இருக்கின்றன. இந்தக் கோவில், பிற்காலச் சோழர் ஆட்சியில் ஏறக்குறைய கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
~ ஓம்நமசிவாய!
No comments:
Post a Comment